அரசாங்க ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!

​கிராமங்களில் குழப்பங்களை விளைவிக்கும் மற்றும் அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்தாள முற்படும் சில அரசாங்க ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​மட்டக்களப்பு போரதீவுப்பற்று 35ஆம் கிராமம் மண்டூர் கண்ணன் வித்தியாலய மைதானத்தில்(19.05.2026) நடைபெற்ற சித்திரை விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது.

​இந்த கிராமத்திலே வேலை செய்யும் சில அரச ஊழியர்கள், அரசாங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைத் தாண்டி, கிராமங்களுக்குள்ளே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதிலும், கிராமங்களைப் பிரிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, மக்களுக்கு இடையே பிளவுகளை உண்டாக்குவதை அவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கான இறுதி எச்சரிக்கையாகும்.

​நாங்கள் ஒருபோதும் அரசாங்க அதிகாரிகளின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதோ அல்லது அவர்களை அச்சுறுத்துவதோ இல்லை. அதேபோன்று அதிகாரிகளைப் பற்றித் தவறாகப் பேசுவதும் எங்கள் நோக்கமல்ல. ஆனால், அரச அதிகாரிகள் தங்களது எல்லையைத் தாண்டி, தங்களுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளை கிராம மக்கள் மீது திணிக்க முற்படுவதையோ அல்லது மக்களை அச்சுறுத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

​அவ்வாறு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் அதிகாரிகள் யாரென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவர்கள் அவதானமாகச் செயல்பட்டு, அரசாங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை மட்டும் செய்ய வேண்டும். 

அதனை விடுத்து, அரசியல் ரீதியாக கிராம மக்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

​மேலும், இப்பகுதி மக்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தான் எப்போதும் மக்களுடன் இணைந்திருப்பேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதன்போது வாக்குறுதி அளித்தார்.
புதியது பழையவை