யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், "சுவிஸ் குமார்" உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை இலங்கை உச்சநீதிமன்றம் இன்று (06.05.2026) ஆம் திகதி ஏகமனதாக உறுதி செய்துள்ளது.
வழக்கின் பின்னணி.....
கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி, பாடசாலை சென்ற 18 வயது மாணவி வித்யா கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் முழு இலங்கையையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக் கோரி நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.
மேல் நீதிமன்றத்தின் ஆரம்பத் தீர்ப்பு.!
2017-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஏழு பேரை குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய இறுதித் தீர்ப்பு
தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீண்டகாலமாக விசாரித்த ஐவர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இன்று பின்வரும் தீர்ப்பை வழங்கியது.
முதலாம் குற்றவாளி சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றவாளிகளுக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற அடிப்படையில், இரு பிரதிவாதிகளைத் தண்டனையிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிறைச்சாலையில் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 11 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
"தாமதமானாலும் நீதி கிடைத்துள்ளது, இதன் மூலம் வித்யாவின் ஆன்மா சாந்தியடையும்" என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இத்தீர்ப்பின் மூலம் இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.