ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த தியாகி பொன். சிவகுமாரனின் 52-வது ஆண்டு நினைவு நாளான இன்று (ஜூன் 05), தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.
போராட்டத்தின் தொடக்கப்புள்ளி
1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சிவகுமாரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் கல்வி கற்றார்.
இலங்கையில் அப்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட 'கல்வித் தரப்படுத்துதல்' முறைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயலாற்றினார்.
ஈழ ஆயுதப் போராட்ட வரலாற்றின் ஆரம்பகாலத் தாக்குதல்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சிவகுமாரன் ஆவார். 1970களின் தொடக்கத்தில் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவையில் இருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்தின் மீது குண்டு வீசிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.
அல்பிரட் துரையப்பாவுக்கு வைக்கப்பட்ட குறி..!
1971 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவின் வாகனத்தில் குண்டு பொருத்தி, ஈழப் போராட்ட வரலாற்றின் முதல் தாக்குதலை நடத்தினார்.
இம்முயற்சியில் துரையப்பா நூலிழையில் உயிர் தப்பிய போதிலும், இந்தத் தாக்குதலே பின்னாட்களில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் பாதையை நோக்கி நகர்வதற்குக் பிரதான தூண்டுகோலாக அமைந்தது.
வரலாறான சயனைட் மரணம்.
1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள், யாழ்ப்பாணம் உரும்பிராயில் வைத்து அப்போதைய காவல்துறையினரால் சிவகுமாரன் சுற்றி வளைக்கப்பட்டார். எதிரியின் சித்திரவதைகளிடம் சிக்கி, இயக்க இரகசியங்களை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், தனது 24-வது வயதில் சயனைட் அருந்தித் தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
ஈழப் போராட்ட வரலாற்றில் 'சயனைட் கலாச்சாரத்தை' தொடங்கி வைத்த முதல் மாவீரராக இவர் போற்றப்படுகிறார்.
தமிழ்த்தேசிய மாணவர் எழுச்சி நாள் (ஜூன் 06)
ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதால், மாணவர்களின் எழுச்சிப் போராட்டங்களை நினைவு கூரும் வகையில், அதற்கு அடுத்த நாளான ஜூன் 6 ஆம் தேதியை "தமிழ்த்தேசிய மாணவர் எழுச்சி நாள்" ஆக தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தினர். அதற்கமைய நாளை மாணவர் எழுச்சி நாளாகத் தமிழ் இளையோரால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.