செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதிர்ச்சி - அவித்த சோளத்தில் புழு! அதிகாரிகள் உடனே தலையிட பொதுமக்கள் அவசர வேண்டுகோள்.!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்சமயம் பக்திப்பூர்வமாக நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாக தற்காலிக கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அவித்த சோளத்தில் பெரிய புழு ஒன்று இருந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​மே 31ஆம் திகதி இரவு, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் அங்கிருந்த தற்காலிக வியாபார நிலையம் ஒன்றில் அவித்த சோளம் (சோளக் குளை) ஒன்றை வாங்கியுள்ளார். அதனை அவர் உண்ண முற்பட்ட போதே, சோளத்தின் உள்பகுதியில் அவிந்த நிலையில் பெரிய புழு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சுத்தமின்மையே காரணம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

​உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, அடிப்படைத் தூய்மையைப் பேணத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சோளத்தை அவிப்பதற்கு முன்னதாக, அதன் தோகைகளை அகற்றிச் சரியாகச் சுத்தப்படுத்தியிருந்தால் இவ்வாறான சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்த்திருக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு...

​ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு தூரப் பிரதேசங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை தருகின்றனர். இவ்வாறான மக்கள் நடமாட்டம் மிகுந்த சூழலில், தற்காலிக கடைகளில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து தற்போது பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

​எனவே, இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள்

ஆலய வளாகத்தில் உள்ள அனைத்து தற்காலிக உணவு விற்பனை நிலையங்களையும் அதிகாரிகள் உடனடியாகத் தீவிர கண்காணிப்புக்கும் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும்.

 விற்பனையாளர்களுக்குத் தூய்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகள் குறித்த அவசர ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்க வேண்டும். 


எதிர்காலத்தில் பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் வகையில், இவ்வாறான அசமந்தப் போக்குடன் தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது தராதரமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமாக வலியுறுத்தியுள்ளனர்.

புதியது பழையவை