திருகோணமலையில் துணிகரம் - கடையில் இருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு!

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டைப் பகுதியில் கடையில் இருந்த வயோதிபப் பெண் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் நேற்று (06.06.2026) மதியம் இடம்பெற்றுள்ளது.

​இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

​திருகோணமலை நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், ஆத்திமோட்டை பகுதியிலுள்ள ஒரு கடையைக் கடந்து சென்றுள்ளனர். பின்னர், மீண்டும் அந்த கடைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

​அவர்களில் ஒருவர் கடையில் பொருள் வாங்குவது போல் பாசாங்கு செய்து, அங்கு இருந்த 69 வயதான வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். 

சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர், வெளியில் காத்திருந்த மற்றைய நபருடன் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நகர் பகுதியை நோக்கி அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.

​இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியுள்ளது.

​இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், நிலாவெளி பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை