அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு காவல்நிலையத்திலுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக்கூடத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு (07.06.2026) தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் குறித்த காவல்நிலையத்திற்கு வருகைதந்து குறித்த நபர் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லையெனவும் உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
உயிரிழந்த குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தரான சாமித்தம்பி பாக்கியராசா என்பதுடன் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் குடும்ப பிரச்சினைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.