மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயதுடைய மதுராந்தகன் -ஜெயபிரியா எனும் இளம் தாய் ஒருவர், குழந்தை பிரசவித்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை, பேத்தாழைப் பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணின் மரணமே, இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான முதலாவது டெங்கு மரணம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கணேசலிங்கம் கலாரஞ்சினி இன்று (26.06.2026) நடைபெற்ற அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த (17.06.2036)ஆம் திகதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இப்பெண், கடுமையான காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் (18.06.2026)ஆம் திகதி அவருக்கு டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, விசேட நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த (21.06.2026)ஆம் திகதி மருத்துவர்களின் பெரும் போராட்டத்திற்கு மத்தியில், அவருக்குச் சுகப்பிரசவம் மூலம் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின் பின்னர் தாய்க்குத் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உயிரைக் காக்க 12 அலகுகள் (Pints) இரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மகப்பேறு விசேட வைத்திய நிபுணர்,மற்றும் மயக்க மருந்து விசேட நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
இருப்பினும், டெங்கு நோயின் தீவிரம் காரணமாக அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால், நேற்று (25.06.2026)வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.!
இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அதனைச் சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தாமல் உடனடியாக தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், டெங்கு கொசுக்கள் பெருகாதவாறு பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.