மட்டக்களப்பு புதுப்பாலம் திடீரென உடைந்து போக்குவரத்து பாதிப்பு -அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நள்ளிரவில் நேரடி விஜயம்!

மட்டக்களப்பு நகரை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான புதுப்பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், அப்பகுதிக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.


​பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ள இக்கட்டான இந்தச் சூழலில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்குத் தற்போது அவசர நேரடி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


​குறித்த வீதியின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, உடனடியாக தற்காலிக 'பெய்லி' (Bailey) பாலம் ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்ட முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தீவிரமாக இறங்கியுள்ளார். 

இதன் ஒரு கட்டமாகவே, விடயத்தின் பாரதூரத் தன்மையை அரச உயர்மட்டத்தின் கவனத்திற்குத் துரிதமாகக் கொண்டு செல்லும் நோக்கில், அரசின் முக்கிய அமைச்சரான இ. சந்திரசேகர் அவர்களை இரவோடு இரவாக அவர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வந்துள்ளார்.

​உடைந்த பாலத்தின் தற்போதைய நிலை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகள் குறித்தும் அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விரிவாகத் தெளிவுபடுத்தியதுடன், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் இணைந்து தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

​மாவட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு, நள்ளிரவு என்றும் பாராது உடனடியாகக் களமிறங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்டு வரும் இந்தத் துரித முயற்சிகளையும், அவரின் மக்கள் சேவையையும் சம்பவ இடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதுடன், தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
புதியது பழையவை