யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி நேற்று(01.05.2026) திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் கூடிய மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், மே மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்றன. அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள், இன்று திங்கட்கிழமை மீண்டும் துவங்கப்பட்டன.
இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது பின்வரும் விபரங்கள் பதிவாகியுள்ளன:
கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்தைக் கொண்ட எலும்புக்கூடு ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
புதைகுழிக்குள்ளிருந்து காய்ந்த தேங்காய் (செத்தல் தேங்காய்) ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை தற்போது சுத்தம் செய்யப்பட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13 நாட்களில் மாத்திரம் இதுவரை 22 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
புதைகுழியிலிருந்து மூக்குத்தி, நாணயக் குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு மற்றும் இன்றைய தினம் மீட்கப்பட்ட காசு வடிவிலான தாயத்து உட்பட 17 பிற பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வாராய்ச்சிகளில், 262 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.