கழிவகற்றலுக்கு உதவாத கிளீன் சிறிலங்கா திட்டம் மக்களை ஏமாற்றும் முயற்சியே.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச சபை கழிவுகள் கொட்டப்படும் செங்கலடி கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையம் வளப் பற்றாக் குறை காரணமாக மிகுந்த சாவாலுடன் இயங்கி வரும் நிலையில் அதற்கான வளங்களை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் கிளின் சிறிலங்கா என்ற பெயரில் கடற்கரைகளையும், பாடசாலைகளையும் துப்பரவு செய்து மக்களை ஏமாற்றி வருவதாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மு. முரளிதரன் தெரிவித்துள்ளார். 

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 12 வது சபை அமர்வில் செங்கலடி கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையத்தின் வளப் பற்றாக்குறை மற்றும் ஆளனி பற்றாக்குறை தொடர்பாக தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற சபை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு உரையாற்றிய ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் அவர்கள் பேசும் போது 

செங்கலடி கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையத்தின் செயற்பாடுகள், அதில் கொட்டப்படும் கழிவுகள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இது குறித்து தவிசாளர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். 
செங்கலடி கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எந்தெந்த பிரதேச சபைகளில் இருந்து கழிவுகள் கொண்டுவரப்படுகின்றது? என்ன வகையான கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன. 

மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்படுவதாக சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன அந்த தகவல்கள் உண்மையானதா? 

இந்த திண்மக் கழிவகற்றல் நிலையம் இன்னும் எத்தனை காலத்திற்கு இயங்க கூடிய நிலையில் உள்ளது? 

இந்த திண்மக் கழிவகற்றல் நிலையத்தை சுற்றி உள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாதது ஏன்? 

அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதேச சபை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் குறித்த கழிவகற்றல் நிலையத்தில் தீப் பிடித்து எரிந்த போது அதனை அனைக்க முடியாமல் போனது. இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க எங்களிடம் உள்ள பாதுகாப்பு திட்டம் என்ன? இது குறித்து பொறுப்புள்ள தவிசாளர் என்ற வகையில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதற்கு பதில் அளித்த ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு. முரளிதரன். 

ஊடகங்களுக்காக இங்கு எது வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் கடந்த ஒரு வருடமாக மிக மோசமாக இருந்த திண்மக் கழிவகற்றல் நிலையத்தை தற்போது படிப் படியாக சீர் செய்து வருகின்றோம். கழிவுகளை பிரிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவுகளை அரைப்பதற்கான ஆளனி, மற்றும் இயந்திரங்கள் இல்லாத நிலையில் உரிய முறையில் கழிவகற்றல்களை மேற்கொள்ள முடியாது உள்ளது. 
இருந்தும் மிகவும் சிறப்பான முறையில் திண்மக் கழிவகற்றல் நிலையத்தை பராமரித்து வருகின்றோம். 
திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுகளை பரிசீலனை செய்தே கழிவகற்றல் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றோம். பல தடவைகள் முறையாக தரம் பிரித்து கொண்டுவராத கழிவு வாகனங்களை திருப்பி அனுப்பி உள்ளோம். பிளாஸ்டிக் போத்தல்களை அரைக்கும் இயந்திரம் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. 

அதை திருத்த முடியாத காரணத்தினால் பெருந்தொகையான பிளாஸ்டிக் போத்தல்களை மண்ணுக்குள் புதைத்து வருகின்றோம். 

அத்துடன் அந்த பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி முறையாக கழிவுகளை மணல் இட்டு மூடி வருகின்றோம். 

பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கே உறுப்பினர்கள் தான் எனவே அனைவரும் கொடுவாமடு திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து அது குறித்து எனக்கு தெரியப்படுத்தலாம். 

அத்துடன் குறித்த கழிவகற்றல் நிலையத்திற்கு ஆளனிகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல வளங்கள் தேவைப்படுகிறது. அதனை பெறமுடிந்தால் இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கலாம். மாவட்டத்தில் உள்ள கழிவுகளை மேலும் முறையாக தரம் பிரித்து சுற்றுச் சூழல் பிரச்சினைகளை இன்றி திண்மக் கழிவகற்றல் நிலையத்தை முறையாக நடாத்திச் செல்ல முடியும். 

ஆனால் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் நாம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றோம். பம்பஸ் கழிவுகளை அகற்றுவதற்கு இதுவரை ஒரு திட்டம் இல்லை. வீதிகளில் அவ்வாறான கழிவுகளை பொதுமக்கள் வீசி வருவதால் நகர்புறங்களில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் அரசாங்கம் கிளீன் சிறிலங்கா திட்டம் என்று கூறிக் கொண்டு கடற்கரை, பாடசாலைகளை ஓரிரு நாட்கள் துப்புரவு செய்து வருகிளது. இதனால் எதுவும் மாறப்போவதில்லை. உண்மையான கிளீன் சிறிலங்கா திட்டம் என்றால் மாவட்டத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையங்களுக்கு நிதி உதவிகளை, வளங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அதை விடுத்து கிளீன் சிறிலங்கா திட்டம் என்ற பெயரில் கடற்கரைகளையும், பாடசாலை களையும் துப்பரவு செய்வதால் மாவட்டத்தில் உள்ள கழிவுகளை அகற்றவோ, நவீன கழிவகற்றல் முறையையோ ஏற்படுத்த முடியாது. என தெரிவித்தார்.
புதியது பழையவை