ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் தலைமையில், பொத்துவில் கோட்டப் பாடசாலை அதிபர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநருடன் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் (15.06.2026) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பொத்துவில் பிரதேசத்தின் சமகால கல்விப் போக்குகள் மற்றும் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினராலும், அதிபர்கள் சங்கத்தினராலும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டடங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட பௌதீக வளப் பற்றாக்குறைகள் மற்றும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயக் கோரிக்கை ஆகிய விடயங்கள் குறித்து இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன.
அதிபர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களைத் துல்லியமாகக் கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர், பொத்துவில் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை இந்த வருடத்திற்குள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படுவதுடன் பாடசாலைகளுக்கான கட்டடங்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பௌதீக வளப் பற்றாக்குறைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் அதற்கான உரிய தீர்வுகள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைப்பது குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் பொத்துவில் பிரதேசத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதற்கான தீர்வினை வழங்குவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.