இரத்தினபுரி, ரக்வானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாக்கியதில், அதன் பாகன்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆற்றுக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்
ரக்வானை விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக இரண்டு யானைகள் கொண்டுவரப்பட்டு விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்தன.
யானை பாகனின் உதவியாளர் ஒரு யானைக்கு தண்ணீர் காட்டுவதற்காக அதனை அருகில் உள்ள ரக்வானை ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ஆத்திரமடைந்த யானை, உதவியாளரைத் கொடூரமாகத் தாக்கி மிதித்துக் கொன்றுள்ளது.
காப்பாற்றச் சென்ற மாமனாருக்கும் நேர்ந்த கொடூரம்.
உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அவரைக் காப்பாற்றும் நோக்கில் பிரதான யானை பாகன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
எனினும், கட்டுப்பாடற்ற நிலையில் இருந்த யானை அவரையும் விடுத்து வைக்காமல் தாக்கியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரும் கித்துல்கலை பகுதியைச் சேர்ந்த மாமனார் மற்றும் மருமகன் (யானை பாகன் மற்றும் அவரது உதவியாளர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மயக்க மருந்து செலுத்தி யானையைப் பிடிக்க நடவடிக்கை
தாக்குதலைத் தொடர்ந்து, அந்த யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல் பகுதியை நோக்கித் தப்பிச் சென்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், தப்பியோடிய யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கோர விபத்து குறித்து ரக்வானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.