மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரம்மாண்ட ஏற்பாட்டில், பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட "மாபெரும் விளையாட்டுத் திருவிழா - 2026" கடந்த ஜூன் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இப்பாடசாலையின் நீண்டகால வரலாற்றில், இத்தகையதொரு பிரம்மாண்ட விழா முதல் தடவையாக வெற்றிகரமாக அரங்கேறியுள்ளமை ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக, பாடசாலையின் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பழைய மாணவர்கள் அனைவரும் தத்தமது வருட அணிகளாக, கொடிகளுடன் அணிதிரண்டனர்.
பழுகாமம் கண்ணன் சிலையடியிலிருந்து எழுச்சிமிகு வீதி ஊர்வலமாகப் புறப்பட்ட அதிதிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை வளாகத்தினுள் நுழைந்த ஊர்வலம், எமது மண்ணின் பெருமைமிகு அடையாளங்களான சுவாமி விபுலானந்தர், சரஸ்வதி அம்மன் மற்றும் பாடசாலையின் ஸ்தாபகர் கண்டுமணி ஆசான் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது.
அதனைத் தொடர்ந்து மைதானத்தில் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி, பழைய மாணவர் சங்கக்கொடி மற்றும் வருட அணிகளின் கொடிகள் முறைப்படி ஏற்றி வைக்கப்பட்டன.
"ஒன்றாக விளையாடுவோம், ஒன்றாக வெல்வோம், ஒன்றாக வளர்வோம்"
இரண்டு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் இரு முக்கியப் போட்டிகள் பிரதான அம்சங்களாகக் களமிறக்கப்பட்டன.
ஆண்களுக்கான கிரிக்கெட் ,மொத்தம் 25 திறமைமிக்க அணிகள் பங்கேற்று, விறுவிறுப்பான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டப் பலப்பரீட்சையுடன் மைதானத்தை அதிரவைத்தன.
பெண்களுக்கான எல்லே, எமது பாரம்பரிய விளையாட்டான எல்லே ஆட்டத்தில் 21 மகளிர் அணிகள் பங்கேற்று, தங்களது அசாத்தியமான வேகத்தினையும் உத்திகளையும் வெளிப்படுத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
இவ்விழாவானது பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமாகிய கி. கிருஷ்ணராஜன் அவர்களின் தலைமையில் மிகச் சிறந்த முறையில் வழிநடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதிகளாகப் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான தெ. சுப்பிரமணியம், த. கனகசூரியம், சு. உதயகுமார், ஆ. புட்கரன் மற்றும் வே. யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் நிறைவில், பாடசாலையைச் செப்பனிட்ட இந்நாள் முன்னாள் அதிபர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு, பழைய மாணவர் சங்கத்தினரால் உயரிய நினைவுச் சின்னங்களும் வழங்கி மிகச் சிறப்பான முறையில் மதிப்பளிக்கப்பட்டனர்.
உக்கிரமான போட்டிகளின் முடிவில், இறுதிப் போட்டிகளில் அசாத்திய திறமைகளை நிரூபித்து சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளர் அணிகளுக்குப் பிரம்மாண்டமான வெற்றிக்கின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவினைக் கண்டுகளிக்கவும், வீரர்களை ஊக்கப்படுத்தவும் பாடசாலையின் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் மைதானத்தில் திரண்டு விழாவைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.