வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்ட யாத்திரிகர்களில் மேலும் ஒருவர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்துள்ளார்.
இதன் மூலம் இந்த வருட பாதயாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபரான கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள 'கஜபா வெட்டை' எனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, நேற்று (13.07.2026)ஆம் திகதி திங்கட்கிழமை காலை இவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடுமையான மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் பிரேதம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாகுகலை பிரதேச பிரதம பொது சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.
இந்த வருட கதிர்காம பாதயாத்திரையின் போது அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் யாத்திரிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற இரண்டாவது யாத்திரிகர் பாதயாத்திரையின் போது மரணமடைந்திருந்தார்.
அதேபோல், இந்த வருட பாதயாத்திரையின் முதலாவது மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில், குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்தது.
உயிரிழந்த அந்த நபர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டு வழிப்பாதையில் நிலவும் கடுமையான காலநிலை மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் காரணமாக யாத்திரிகர்கள் தங்களது உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.