செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மழைக்கவச அங்கியுடன் கூடிய சிறுவன் ஒருவனின் எலும்புக்கூடு நேற்று (23.07.2026) கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் 41-ஆவது நாளான நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளிலேயே, சிறுவன் ஒருவன் மழைக்கவச அங்கி (Raincoat) அணிந்திருந்த நிலையிலான எலும்புக்கூடும் அடங்குகிறது.
அகழ்வுப் பணி நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள்....
இன்றைய நாள் கண்டெடுப்பு:- 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன (மழைக்கவசத்துடன் கூடிய சிறுவனின் என்புக் கூடு உட்பட).
மொத்த அகழ்வு நாட்கள்:-இதுவரை பல கட்டங்களாக 95 நாட்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
அடையாளம் காணப்பட்டவை:- செம்மணி புதைகுழி வளாகத்தில் இதுவரை மொத்தம் 478 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் இதுவரை 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தடயவியல் ஆய்வுகளும், நீதிமன்ற மேற்பார்வையிலான அகழ்வுப் பணிகளும் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.