கதிர்காமம் நோக்கிச் சென்ற கார் - லொறியுடன் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து - குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

​மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், செட்டிபாளையம் பகுதியில் இன்று (25.07.2026)ஆம் திகதி  காலை 8:00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

​வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்றும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வியாபார நடவடிக்கைகளுக்காகப் பயணித்த லொறி ஒன்றும் செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

​அதிவேகமாக வந்த இரு வாகனங்களின் சாரதிகளாலும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாம போனதே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் வீதியிலேயே தலைகீழாகக் குடைசாய்ந்தன.
​இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

"வாகனங்கள் இரண்டும் வீதியில் குடைசாய்ந்து உருக்குலைந்த நிலையிலும், எவ்வித உயிரிழப்புகளும் இன்றி அனைவரும் தப்பியது இறைவனின் பேரருளே!" என விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

​சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை