எல் -நினோ கடுமையான தாக்கத்திற்கான சாத்தியக்கூறு 63% இலங்கையில் அவசர நடவடிக்கை.!


எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Niño) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் முதலாவது கலந்துரையாடல் நேற்று (30.06.2026) ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

​உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், அரச நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் மற்றும் பொதுமக்களைத் தெளிவுபடுத்தி அனர்த்த அபாயத்தைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

​63% கடுமையான தாக்கத்திற்கான சாத்தியக்கூறு.

​தற்போதைய தரவுகளின்படி, எல்-நினோவினால் கடுமையான தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 63% ஆகவும், பலவீனமான தாக்கத்திற்கான சாத்தியக்கூறு 33% ஆகவும் இருப்பது இக்கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. 

இந்த நிலைமையின் கீழ் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

​இரண்டு வாரங்களில் அவசர திட்டம்
​உலகளாவிய எல்-நினோ நிலைமையால் இலங்கையில் வறட்சி அல்லது மழை வீழ்ச்சி அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

எனவே, எந்தவொரு காலநிலை சூழலையும் எதிர்கொள்வதற்குப் பின்பற்ற வேண்டிய முறையான வேலைத்திட்டம் ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

​வளிமண்டலவியல் திணைக்களம் மட்டுமே அறிவிக்க முடியும்.

​எல்-நினோ நிலைமை தொடர்பில் வதந்திகள் மற்றும் வெவ்வேறுபட்ட அறிவிப்புகள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில், இனிவரும் காலங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மாத்திரம் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

​இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான கே. டி. லால்காந்த, சமந்த வித்யாரத்ன, அநுர கருணாதிலக, வசந்த சமரசிங்க, சுசில் ரணசிங்க மற்றும் அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் செயலாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

​- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
புதியது பழையவை