கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்க முயன்ற 9 மாத குழந்தையின் தாய் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை இரும்புக் கம்பியைக் கொண்டு மீட்க முயன்ற 9 மாதக் குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் என்பவர் இன்று(18.07.2026) ஆம் திகதி மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​யாழ்ப்பாணம் வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஸ் நேசமலர் என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

வரணிப் பகுதியில் 12 அடி அகலமுடைய ஒழுங்கையூடாக அங்குள்ள கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு '3 பேஸ்' (3 Phase) மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மின்வடம் அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு மேலாகவே ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​இந்நிலையில், சம்பவத்தன்று குறித்த பெண்ணின் வீட்டுப் பாவனைக் கிணற்றுக்குள் கோழிக்குஞ்சு ஒன்று விழுந்துள்ளது. 

அதனை மீட்பதற்காக அந்தப் பெண் நீளமான இரும்புக் கம்பி ஒன்றைக் கிணற்றுக்குள் செலுத்தி, கோழிக்குஞ்சை மேலே தூக்க முயன்றுள்ளார்.

​இதன்போது, அவர் கையாண்ட இரும்புக் கம்பி வீட்டின் மேலாகச் சென்ற கூட்டுறவு நிறுவனத்தின் மின்சார இணைப்பில் எதிர்பாராதவிதமாக உரசியுள்ளது. 

இதனால் இரும்புக் கம்பியினூடாக மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அப்பெண் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். 

உடனடியாக அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

​பொதுமக்கள் விசனம் மற்றும் கோரிக்கை.

இவ்விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

குடியிருப்புப் பகுதி வீடுகளுக்கு மேலாக இந்த மின் கம்பிகள் செல்வது ஏற்கனவே பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், வீதியின் மறுபக்கத்தில் உள்ள காணியில் இருக்கும் மிக உயர்ந்த பனை மரங்கள், தற்போது வீசி வரும் பலத்த காற்றினால் முறிந்து விழும் அபாயமும் காணப்படுகிறது. 

அவ்வாறு பனை மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தால், மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

​இந்த ஆபத்தான மின்சார இணைப்பை மாற்றி அமைப்பதற்கும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் சாவகச்சேரிப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை