2026 ஆம் ஆண்டுக்கான Agri Plus தேசிய நெல் உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் சிறுபோக அறுவடை விழா, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு பனங்காட்டு கண்டத்தில் இன்று (16.07.2026)ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். நிப்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் கலந்துகொண்டு நெல்விளைச்சல் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும், அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அமைப்புகளின் தலைவர் இ. சுவர்ணராஜ், விவசாய விரிவாக்கல் நிலைய உத்தியோகத்தர்களான எம்.எச். நுசைத் மற்றும் எம்.ஏ. சில்மியா, விவசாய அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, Agri Plus தேசிய நெல் உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட நெற்செய்கையின் அறுவடை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நெல்விளைச்சல் மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நவீன விவசாயபடி முறைகள், உர முகாமைத்துவம் மற்றும் எதிர்கால விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய முயற்சியின் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.