மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் அத்துமீறும் சிங்களக் குடியேற்றவாசிகள் - தமிழ் பண்ணையாளர்களுக்கு ஆயுதமுனையில் மிரட்டல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் அத்துமீறிக் குடியேறி வருவதால் பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவி வருகின்றது.

​கடந்த ஒரு மாத காலமாக பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் இப்பகுதியினுள் அத்துமீறி நுழைந்து, காடுகளை வெட்டி, குடிசைகளை அமைத்து வருகின்றனர். இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்குப் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

​இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நேற்று  (30.06.2026) மதியம் பண்ணையாளர்களின் இருப்பிடங்களுக்கு கத்திகளுடன் சென்ற சில சிங்களவர்கள், அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மரண மிரட்டல் விடுத்துள்ளனர்.

​தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையைப் பாதுகாப்பதற்காக கடந்த 1,020 நாட்களுக்கும் மேலாக அறவழியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழ் பண்ணையாளர்களுக்கு, இந்த ஆயுத மிரட்டல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

​நீதிமன்ற உத்தரவை மீறும் குடியேற்றவாசிகள்
​இப்பகுதியில் கடந்த காலங்களில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு எதிராக பண்ணையாளர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு, அத்துமீறிக் குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், சிலர் நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கேயே தங்கியுள்ளனர்.

​அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களைக் கண்காணிக்கவும் பண்ணையாளர்களின் பாதுகாப்புக்காகவும் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்ட போதிலும், அதன் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

​பண்ணையாளர்கள் செல்லும்போது கடுமையான ஆள் அடையாளப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸார், காடுகளை அழித்து அத்துமீறிப் பிரவேசிக்கும் சிங்களவர்கள் மீது எந்தவொரு தடுப்பு நடவடிக்கையையும் எடுப்பதில்லை எனப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மாறாக, கடந்த வாரம் சில சிங்களவர்களுடன் பண்ணையாளர்களின் இருப்பிடங்களுக்குச் சென்ற பொலிஸார், பண்ணையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

​தற்போதைய சூழலில், பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியிலேயே வெளிமாவட்ட நபர்கள் காடுகளை அழித்து, புற்தரைகளுக்குத் தீ வைத்து, சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.

​மாகாவலி திணைக்களம், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்ற பல அரச திணைக்கள அதிகாரிகள் இப்பகுதியில் இருந்தும் இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தவறியுள்ளனர். 

சாதாரண தமிழ் மக்களுக்கு எதிராக உடனடியாக வழக்குகளைப் பதிவு செய்யும் இந்தத் திணைக்களங்கள், பேரினவாத அரசின் சிந்தனைக்கு அமைவாகவே தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகப் பண்ணையாளர்கள் தரப்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை