அம்பாறை மாவட்டம்,
நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக பி. சத்தீஸ்கரன் அவர்கள் நேற்று (02.07.2026) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீண்டகாலமாக நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் செயலாளராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது நிரந்தர செயலாளராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் தனது ஆரம்பகால முதல் நியமனமாக போரதீவுப்பற்று பிரதேச சபையில் பதில் செயலாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது பதவி உயர்வு மற்றும் கடமையேற்பை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபை வளாகத்தில் நேற்று காலை விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் முன்னிலையில், பி. சத்தீஸ்கரன் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பிரதேச சபையின் உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்களான கே. உதயகுமார், எம். பி. நிவாஸ், அப்துல் லத்தீப் மற்றும் சபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
புதிய நிரந்தர செயலாளருக்கு மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.