இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியை கலாபூசணம் சுபித்ரா கிருபாகரன் அவர்களின் இறுதிக்கிரியைகளின் போது, அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டிய சமர்ப்பணம் (நாட்டியாஞ்சலி) காண்போரை நெகிழ வைத்துள்ளது.
மட்டக்களப்பில் ‘பரதகலாலயா’ என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, எண்ணற்ற பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர் ஓய்வுபெற்ற ஆசிரியையான சுபித்ரா கிருபாகரன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதக்கலை வளர்ச்சிக்குத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அவருக்கு, ‘கலாபூசணம்’ மற்றும் ‘பரதசூடாமணி’ ஆகிய உயரிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) சுகவீனம் காரணமாகக் காலமான இவரது இறுதிக்கிரியைகள், திங்கட்கிழமை (20.07.2026) மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன.
இதன்போது, தமக்குக் கலை கற்றுத் தந்த குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக, அவரது மாணவர்கள் கண்ணீர்மல்க நாட்டியாஞ்சலி செலுத்தினர்.
குருவின் நினைவாக இடம்பெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதோடு, இதன் காணொளிகள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன.
இவ்வுடலஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அமரர் சுபித்ரா கிருபாகரனின் கலைப்பணி அவர் உருவாக்கிய மாணவர்களின் மூலம் என்றும் நிலைத்திருக்கும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.