மட்டக்களப்பு ஏறாவூர் பற்று தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்திடம் மகஜர் கையளிப்பு!

தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூறி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழரசுக் கட்சியின் நகர சபை உறுப்பினர் ரகுவரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தளவாய் வீட்டு திட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தனர். 

தங்களுக்கான வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, காட்டு பாதைகளை துப்பரவு செய்து தரவில்லை, வீதி விளக்குகள் போட்டு தரவில்லை என்றும் பல தடவைகள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஏறாவூர் பற்று தவிசாளரிடம் முறையிட்டும் அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்கள் கலந்து கொண்டு இதற்கான தீர்வுகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தார். 

தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் நகர சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரான நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதே நேரம் மேற்படி ஆர்பாட்டம் தோடர்பாக வட்டார உறுப்பினர்களுக்கோ தவிசாளருக்கோ தெரியப்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் ஏறாவூர் பற்று  பிரதேசங்களில் இது போன்று பல ஆர்ப்பாட்டங்களை தங்களது சகாக்களை வைத்து ஒழுங்கு படுத்தி வருவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
புதியது பழையவை