இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் பெருவிழா, இன்று (15.07.2026) ஆம் திகதி மாலை பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களின் பக்திப் பரவசத்துடனும் ‘அரோகரா’ கோசத்துடனும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இவ்விழாவின் மிக முக்கிய மற்றும் தனித்துவமான நிகழ்வான கொடியேற்றம், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி கதிர்காம வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும், குறிப்பாக வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு அடியார்கள் கதிர்காமத்தில் குவிந்துள்ளனர்.
கொடியேற்ற நிகழ்வின் போது ஒட்டுமொத்த கதிர்காமப் பதியே "அரோகரா" என்ற பக்தி முழக்கத்தால் அதிர்ந்தது.
மத நல்லிணக்கத்தின் அடையாளம்
கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் திருவிழா பாரம்பரியமாக இந்து, பௌத்த, இஸ்லாமிய மதங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு தளமாக விளங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே, பள்ளிவாசலில் கொடியேற்றப்பட்டு இந்த விழா அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (15.07.2026)ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இந்த ஆடிவேல் திருவிழா தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவுள்ளதுடன், பாரம்பரிய உள்வீதி, வெளிவீதி உலாக்கள் மற்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீர்த்தோற்சவத்துடன் (30.07.2026)நிறைவடையவுள்ளது.
பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கதிர்காம ஆலயக் கணக்காளர் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.