ஹஜ் யாத்திரிகர்களுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களுக்கிடையிலுமான சந்திப்பு நேற்று (07.07.2026) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது.
சவூதி அரேபியத்தூதரகத்தின் வழிகாட்டலின் கீழ் இவ்வருடம் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய யாத்திரிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, அல்லாஹ்வின் விருந்தினர்களான (ஹஜ் யாத்திரிகர்கள்) மீது சவூதி அரசாங்கம் காட்டும் மகத்தான கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக புனித ஹரம் ஷரீஃபின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகியோருக்கு யாத்திரிகர்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த முன்னெடுப்புகளில் "புனித ஹரம் ஷரீஃபின் பாதுகாவலரின் ஹஜ் விருந்தினர் திட்டம்" ஒன்றாகும் என்பது இச்சந்திப்பில் விசேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்திட்டம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சேவை செய்வதில் சவூதி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
யாத்திரிகர்கள் எவ்வித சிரமமுமின்றி, மன அமைதியுடன் தமது ஹஜ் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்குத் தேவையான உயர்தர வசதிகளையும் சிறந்த கவனிப்பையும் சவூதி அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.