மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் இன்று (01.07.2026)ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பிரிவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் மொஹமட் பஸீர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் சமுர்த்தித் திட்டங்களை மேலும் வலுவூட்டி, அதனை வெற்றிகரமாக முன்னோக்கி நகர்த்துவதற்கு புதிய பணிப்பாளரின் பணிக்காலம் சிறக்க வேண்டுமென இதன்போது அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிவந்த திரு. எஸ். ராஜ்பாபு அவர்கள் இடமாற்றம் பெற்று, கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இன்றைய தினமே (01.07.2026) தனது பதவியினைப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிவந்த திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம், அந்த இடமாற்றத்திற்கு அமைவாகவே தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.