குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக, திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று(06.07.2026) அமைதி வழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி பிரதேச சபையின்
உத்தியோகத்தர்கள் சிலரால் இந்தத் தடையற்ற போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச சபை தவிசாளரின் தன்னிச்சையான மற்றும் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
முக்கிய கோரிக்கைகளும் வாசகங்களும்:
போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அவற்றில் குறிப்பாக
"ஊழியருடனான தவிசாளரின் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்"
"இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவரை மீண்டும் தவிசாளராக தொடரவிட்டதன் விளைவே இது"
"அலுவலக அரசியலில் அலுவலர்களை தூண்டாதே!"
"பழிவாங்கலை உடனே நிறுத்து!"
போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கியவாறு ஊழியர்கள் அமைதி வழியில் தங்களது நீதிக்கான கோரிக்கைகளை ஆளுநர் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
மீண்டும் தவிசாளராக பதவியேற்றவரின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் காரணமாக அலுவலகச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து தமக்கு நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.