குரங்கிடமிருந்து மீட்ட கைப்பேசி - தமிழ் மாணவியின் குடும்பத்திடம் ஒப்படைத்து மனிதநேயம் காட்டிய சிங்கள இளைஞர்.!

​திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் குரங்கிடம் சிக்கிய, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

​அனுராதபுரம் – எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்தச் சாதுரியமான நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.

​கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் திருக்கோவிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு குரங்கு ஒன்றின் கையில் பெறுமதிமிக்க கைப்பேசி ஒன்று இருப்பதை இவ்விளைஞர் அவதானித்துள்ளார். 

உடனடியாகச் சுதாகரித்துக் கொண்ட அவர், குரங்குடன் போராடி அந்த கைப்பேசியைப் பத்திரமாக மீட்டுள்ளார்.

​ஆராய்ந்து பார்த்ததில், கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஆலய வழிபாட்டிற்காக வருகை தந்திருந்த மாணவி ஒருவரின் கைப்பேசியையே குரங்கு பறித்துச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

அம்மாணவியின் கல்வி சார்ந்த மிக முக்கியமான பல ஆவணங்களும் தகவல்களும் அக்கைப் பேசியில் சேமிக்கப்பட்டிருந்தன.

​இதனையடுத்து, மீட்கப்பட்ட கைப்பேசியிலிருந்த 'சிம்' (SIM) அட்டையின் உதவியுடன் உரிமையாளரைத் தொடர்புகொண்ட அவ்விளைஞர், கடந்த (28.07.2026) ஆம் திகதி அன்று பிற்பகல் கிளிநொச்சிக்குச் சென்று, காவல் துறை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் முன்னிலையில் அம்மாணவியின் தந்தையிடம் கைப்பேசியை ஒப்படைத்துள்ளார்.

​இன நல்லிணக்கத்திற்கும் மனிதநேயத்திற்கும் சான்றாக அமைந்த இவ்விளைஞரின் நேர்மையான செயலை அப்பகுதி மக்கள் மட்டுமன்றி பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
புதியது பழையவை