ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான 1008 சங்காபிஷேகமும் பாற்குடப்பவனியும் (19.07.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திப் பெருக்கோடும் வெகுவிமர்சையாகவும் நடைபெற்றன.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்பக் கிரியைகள் கடந்த (20.06.2026)ஆம் திகதி சனிக்கிழமை முறைப்படி ஆரம்பமாகி நடைபெற்று வந்தன.
அதன் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் கடந்த (26.06.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கிரியாசாரியர்களால் முறைப்படி யாகசாலைப் பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.
இதன்போது "அரோகரா" கோஷங்கள் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிள்ளையாரின் அருளைப் பெற்றனர்.
மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத்தில் தினசரி விசேட மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நல்நிகழ்வாக இன்று (19.07.2026)ஆம் திகதி காலை விசேட பாற்குடப்பவனி நடைபெற்றது.
பிரதான வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பக்திப் பரவசத்துடன் புறப்பட்ட இப்பாற்குடப்பவனியானது, கிராமத்து வீதிகள் வழியாக ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்த வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1008 சங்குகளால் சுவாமிக்கு மிகச் சிறப்பான முறையில் விசேட சங்காபிஷேகமும் பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.
இன்றைய நன்னாளில் நடைபெற்ற இந்த விசேட ஆன்மீக நிகழ்வுகளில் பெருமளவிலான கிராம மக்களும், பக்தர்களும் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலயப் பரிபாலன சபையினர், திருப்பணிச் சபையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மிக நேர்த்தியான முறையில் செய்திருந்தனர்.