திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (8.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் பின்பற்றுவதில் தவறிழைத்துள்ளனர் என வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்துமூலமான சமர்ப்பணத்தை சமர்ப்பித்தார்.
இதேவேளை தாமும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாக ஏனைய எதிராளிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சிரேஸ்ட வழக்கறிஞர் சஞ்ஜீவ வீர விக்ரம வாதங்களை முன்வைத்தார்.
இதனை கருத்தில் கொண்ட திருகோணமலை பிரதம நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.