பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து, தற்போது இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்தும் ஊடகவியலாளர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் சேறுபூசல்களையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பணம் வாங்கியதை நிரூபித்தால் ஊடகத் தொழிலை விடுகிறேன்-
நேரடி சவால்
"ஊடகவியலாளர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயற்படுகிறார்கள் என்று நீங்கள் கூறும் குற்றச்சாட்டை உங்களால் நிரூபிக்க முடியுமா?"
என கேள்வி எழுப்பியுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதிரடி சவால் ஒன்றையும் விடுத்துள்ளார்.
"உங்களால் முடிந்தால் நான் இந்த ஊடகத் தொழிலில் இருந்தே நிரந்தரமாக ஒதுங்கிக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால், நீங்கள் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறீர்களா?"
"ஓய்வூதிய அரசியலுக்கு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?"
அரசியல் அனுபவமற்ற முறையில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி, "ஓய்வூதிய வயதில் அரசியலுக்கு வந்த உங்களுக்கு, கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் என்ன நடந்தது என்பது பற்றியாவது தெரியுமா? நாம் சந்தித்த சவால்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளும் உங்களுக்குத் தெரியுமா?" என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசு கட்சியின் உண்மையான அங்கத்தவர்கள் பலருக்கு தங்களைப் பற்றி மிகத் தெளிவாகத் தெரியும் என்றும், அவர்களையும் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கணக்குப்போடுகிறாரா என்றும் அவர் சாடியுள்ளார்.
அடியாட்களை வைத்து அச்சுறுத்துவது நாகரிகமா?
ஊடகங்களின் செய்திகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை முறைப்படி தெளிவுபடுத்துவதே நாகரிகமான அரசியல் பண்பாகும்.
அதை விடுத்து, மாற்று அரசியல் கட்சிகளைப் போல ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும், அடியாட்களை வைத்து அவதூறு பரப்புவதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களின் வலிமை
"ஊடகம் நினைத்தால் என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் செய்து காட்டியிருக்கின்றோம்.
தற்போதும் செய்து கொண்டிருக்கின்றோம்.
உங்களது இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை."
நேரடி விவாதத்திற்கு அழைப்பு.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தைரியமிருந்தால் தம்மோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஊடகவியலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்
தமது முகமே தங்களின் உண்மைத் தன்மையைக் காட்டிக் கொடுத்துவிடும் நிலையில், இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தான் இன்று வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறி, ஊடகவியலாளர் தனது கண்டன அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.