நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்குத் தொடர் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் அவசரமாகப் பாதுகாப்பானதொரு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் சம்பவத்தின் போது இந்த அதிகாரி தனது உயிரையும் பொருட்படுத்தாது, கைதிகளின் அராஜகத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சக அதிகாரிகளை மீட்டெடுத்ததோடு சிறைச்சாலைத் திணைக்களத்தின் நற்பெயரையும் காப்பாற்றியிருந்தார்.
கைதிகளின் அராஜகத் தாக்குதல்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்குப் பாதாள உலகக் குழுவினரால் கடுமையான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மரண அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அந்த அதிகாரியின் உயிருக்குக் கடும் ஆபத்து நிலவுவதை உணர்ந்த சிறைச்சாலைத் திணைக்கள உயர் அதிகாரிகள், அவரது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவைக் கொண்ட வேறொரு சிறைச்சாலைக்கு அவரைச் சேவை இடமாற்றம் செய்துள்ளனர்.
இந் நிலையில் கடமை உணர்வுடன் செயற்பட்ட இந்த துணிச்சலான அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் முறையான மற்றும் நிரந்தரமான விசேட பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.