மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த உணவகம் ஒன்று, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பூட்டப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை (13.07.2026) இரவு வேளையில், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் விசேட உணவு பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த உணவகம் ஒன்று அடையாளங் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை (15.07.2026) ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால், களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த உணவகத்தின் உரிமையாளரை ஒரு இலட்சம் (01 இலட்சம்) ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், உணவகத்தில் காணப்படுகின்ற சுகாதாரக் குறைபாடுகள் அனைத்தும் முழுமையாகச் சீர்செய்யப்படும் வரை அதனைப் பூட்டி வைக்குமாறும் அதிரடி கட்டளை பிறப்பித்துள்ளது.