சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (07.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்தனர்.
இலங்கைத் தீவில் 1948ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அரச படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் வகைதொகையின்றி வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இது குறித்து ஊடக சந்திப்பில் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்
"வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மைத் தன்மையையோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாமல் இலங்கை அரசு பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது. விசாரணை என்ற பெயரில் 'திருடனே குற்றவாளியைத் தேடும்' நாடகத்தையே அரசு அரங்கேற்றுகிறது. இது சர்வதேசத்தையும், நீதி கோரும் எம்மையும் ஏமாற்றும் செயலாகும்."
தற்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசுகளை விட மிகவும் தந்திரோபாயமாக இந்த விவகாரத்தைக் கையாள்வதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
"தெற்கில் காணாமலாக்கப்பட்ட சிங்கள இளைஞர்களையும், வடகிழக்கு தமிழ் இளையோர்களையும் சமப்படுத்தி, தெற்கோடு கைகோர்த்து தீர்வு காண்போம் என தற்போதைய அரசு வாதாடுகிறது.
இது எமது கண்ணீரை விலை பேசும் அறமற்ற வாதம். தெற்கில் மரணச் சான்றிதழ்களையும் நட்டஈடுகளையும் பெற்றுக்கொண்டதைப் போல நாம் செய்யத் தயாரில்லை. நாம் எமது பிள்ளைகள் எங்கே என்ற நீதியை மட்டுமே கோருகிறோம். செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளைக் காட்டி, எங்களை நட்டஈட்டை நோக்கி தள்ளிவிடும் உளவியல் போரை இந்த அரசு நடத்தி வருகிறது."
400க்கும் மேற்பட்ட பெற்றோரின் இழப்பு.
நீண்டகாலமாக நீதி கோரி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டங்களின் காரணமாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களின் மறைவைத் தொடர்ந்து இந்த தேடலின் வீச்சு அருகிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு.!
இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச நீதியை வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாகவே இவ்வருட சர்வதேச மாநாடு அமையவுள்ளது.
எனவே, இந்த மாநாட்டிற்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும், பொது மற்றும் சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.