எதிர்வரும் (10.07.2026)ஆம் திகதி உகந்தை காட்டுப் பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள அடியவர்களுக்கான அவசர மருந்துப் பொருட்கள், அக்கரைப்பற்று CDFF கிளையினால் இன்றைய தினம் (04.07.2026)ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, கடந்த மே மாதம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த அடியார்கள் குழுவினர், தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான அடியவர்கள் இப்பாதயாத்திரையில் இணைந்துள்ளதுடன், அவர்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், குண்டுமடு முருகன் ஆலயத்தில் தங்கியுள்ளனர்.
காட்டுப் பாதையினூடான நீண்ட, கடினமான பயணத்தின் போது அடியவர்களின் அவசர மருத்துவத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, இந்த மருந்துப் பொருட்கள் வழங்கும் மனிதாபிமானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அக்கரைப்பற்று CDFF கிளையின் முகாமையாளர் வடிவேல் டினேஸ், நிறுவனத்தின் நிர்வாக மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அடியவர்களுக்கான மருந்துப் பொருட்களைப் பொறுப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.