மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நீண்டகாலத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இன்று (23.07.2026) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நீர்வழங்கல் அமைச்சின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தற்போது திருகோணமலை மாவட்டத்தை மையமாகக் கொண்டே மட்டக்களப்புக்கான திட்டமிடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனியான திட்டமிடல் (Planning) மற்றும் வரைபு (Design) பிரிவு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தின் தேவைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள உள்ளூர் அடிப்படையிலான அமைப்பே அவசியமானது.
தனிப் பிரிவு உருவாக்கப்படுவதன் மூலம் நீர்விநியோகம் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து விரைவாகச் செயற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
முந்தனையாறு திட்டம்- உடன்படிக்கையில் தாமதம் ஏன்?
பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஊடாக 2017–2018 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2020 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட முந்தனையாறு குடிநீர் மற்றும் நீர்வள அபிவிருத்திக் கருத்திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர்.
"கடந்த 18 மாதங்களாக பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கத் தயாராக உள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இந்த ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்படும்?" என வினவினார்.
அரசாங்கம் கைவிடவில்லை – நீர்வழங்கல் அமைச்சர் பதில்.
"முந்தனையாறு திட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் கைவிடவில்லை. நிதி வழங்கும் நிறுவனத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இத்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது."
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இத்திட்டம் மிக முக்கியமானது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
மட்டக்களப்பு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு முந்தனையாறு திட்டமே நிலையான தீர்வாகும் என்பதால், அரசாங்கம் சர்வதேச நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை விரைந்து கைச்சாத்திட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பாராளுமன்றத்தில் வலுப்பெற்றுள்ளது.