கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09 முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எச்சரிக்கை -சீருடை விவகாரத்தால் பரபரப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

​இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதங்கள் இன்று (14/08/2026) வெள்ளிக்கிழமை குறித்த ஊழியர்களுக்குத் தனித்தனியாகக் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

​கடிதத்தின் பின்னணி மற்றும் குளறுபடி:
'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' என்ற தலைப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு இக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​இக்கடிதத்தின் நகல்கள் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகிய மேலதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

​கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்....


​நியமனம் மற்றும் அறிவுறுத்தல்-
கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டு கடமையேற்ற அன்றைய தினமே, சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாகச் சீருடை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது.

​முறையீடுகள்-
எனினும், குறித்த சுற்றுநிரூபத்தைப் பின்பற்றாமல் கடமைக்குச் சமூகமளிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

​கண்டிப்பான எச்சரிக்கை-
நியமனம் பெற்ற அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் (Probation Period) இருக்கும் ஊழியர்கள் என்பதை நினைவூட்டும் வைத்தியசாலை நிர்வாகம், உடனடியாகச் சீருடை வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்குச் சமூகமளிக்குமாறு பணித்துள்ளது.

​ஒழுக்காற்று நடவடிக்கை-
சுற்றறிக்கையின் வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில், உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை