மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீடொன்றில் இருந்து 24½ பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அங்கு தங்கியிருந்து கல்வி கற்றுவந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026)ஆம் திகதி இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பெறுமதிமிக்க நகைகள் காணாமல் போனதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திங்கட்கிழமை நேற்று (03.08.2026)ஆம் திகதி திருடப்பட்ட அனைத்து தங்க ஆபரணங்களையும் மீட்டதுடன், சந்தேகநபரான யுவதியையும் கைது செய்தனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவரே இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் லீலாரெத்னவின் பணிப்புரைக்கமைய, களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.யூட் றொமேஸ்ஸின் நேரடிக் கண்காணிப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி. ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையையும் நகைகள் மீட்பையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்ட யுவதி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.