வறட்சியான வானிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதால், மட்டக்களப்பில் தினசரி 4 மணிநேர நீர் விநியோகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாள்தோறும் முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வறட்சியான சூழலிலும் நாடு முழுவதிலும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை போல் இயங்கி வருகின்றன.
இலங்கையில் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 28 லட்சம் கன மீற்றர் நீரில், 23% முதல் 24% வரையிலான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்தே பெறப்படுகின்றது.
அத்துடன், 65% நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமே பெறப்படுவதுடன், அதில் சுமார் 6 லட்சம் கன மீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுகின்றது.
நாட்டின் மொத்த நீர் ஆதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையையே நம்பியுள்ளது.
தற்போதைய வறட்சியால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களே பிரதானமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மொனராகலையின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளில் நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அங்கேயும் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடார்.