மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (31.08.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட உத்தியோகத்தர்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பையும் நியாயமான கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.
சேவை மற்றும் சம்பள உரிமை: புதிய சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக வழங்குவதோடு, வாக்குறுதியளிக்கப்பட்ட MN-5 சம்பளத் தரநிலையையும், பட்டத்திற்குப் பொருத்தமான சம்பள அமைப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.
பதவி உயர்வு & சேவைக்காலம்: 5 வருடங்களில் தரப் பதவி உயர்வுகள் மற்றும் விசேட தரப் பதவி உயர்வு முறையை அறிமுகப்படுத்துவதோடு, பயிற்சிக் காலத்தையும் சேவைக்காலமாக கணக்கில் சேர்க்க வேண்டும்.
கொடுப்பனவுகள் & பொருளாதார நிவாரணம்: வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழலில் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு, முறையான பயணக் கொடுப்பனவு மற்றும் ஈ.டி.ஓ. (EDO) அலுவலகக் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாகக் கட்டமைப்பு: பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரச சேவை கட்டமைப்பிற்குள் முறையாக நிலைநிறுத்தி, அவர்களுக்கான முறையான கடமைப் பட்டியல்களை வழங்க வேண்டும்.
அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் உரிய நீதியை வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.