மட்டக்களப்பு மண்ணின் அறிவுக் களஞ்சியமும், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மூத்த தமிழ் அறிஞரும் பிரபல எழுத்தாளருமான ‘வாகரை வாணன்’ (அரியரெத்தினம்) அவர்கள் தனது 85 ஆவது வயதில் நேற்று(10.08.2026)அன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் இறையடி சேர்ந்தார்.
1941 டிசம்பர் 22 ஆம் திகதி மட்டக்களப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அரியரெத்தினம் அவர்கள், ‘வாகரை வாணன்’ எனும் புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகிற்குப் சேவையாற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை. அன்னாரின் மறைவு ஈழத்துத் தமிழ் கலை, இலக்கிய உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
பன்முக ஆளுமையும் வரலாற்றுப் பணியும்:
தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற பன்மொழியாளரான இவர், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், வரலாற்று ஆய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் இயங்கியவர்.
குறிப்பாக, மட்டக்களப்பின் வடபிராந்தியமான வாகரையின் வரலாறு, பண்பாடு மற்றும் வாழ்வியலைத் தனது எழுத்துக்களால் வெளிக்கொணர்ந்தவர். பனிச்சங்கேணியில் அரசாட்சி செய்த வன்னிச்சி நாச்சி அரசியின் வரலாற்றை ஆய்வு செய்து வெளிப்படுத்தியதுடன், அவருக்குச் சிலை நிறுவுவதிலும் முதன்மைப் பங்காற்றினார்.
‘வாகரை ஒரு வரலாற்றுப் பார்வை’, ‘பனிச்சங்கேணி அரசி’, ‘கிழக்கிலங்கைத் தமிழகம்’, ‘பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’, ‘மட்டக்களப்புக் காவியம்’, ‘சுட்ட பொன்’ உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து, மட்டக்களப்பின் வரலாற்று ஆவணங்களாக எதிர்கால சந்ததிக்கு வழங்கிச் சென்றுள்ளார்.
இறுதிக்கிரியை விபரம்.
அன்னாரது பூதவுடலுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தில் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை பி.ப. 3:30 மணிக்கு இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து நாவற்குடா கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவையடுத்து இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.