வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான தீர்த்தோற்சவம், இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
கடந்த 08.08.2026 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வருடத்திற்கான மகோற்சவம், இன்று மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வுடன் இனிதே நிறைவுற்றது.
முருகப்பெருமான் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளிய வேளையில், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் "அரோகரா" கோஷங்களை எழுப்பி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.
கதிர்காம ஆலயத்தின் பண்டைய முறைப்படியான பூஜை வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு மரபுகள் இங்கேயும் பின்பற்றப்பட்டு வருவதால், இத்தலத்தை பக்தர்கள் "சின்னக் கதிர்காமம்" என்றும் போற்றி அழைக்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றனர்.