பாதிக்கப்பட்ட தாய்மார்களை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) ஊடாக அழைத்து, மரணச் சான்றிதழையும் இழப்பீட்டையும் வழங்கி உண்மையான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய இந்த அரசாங்கம் மும்முரமாக வேலை செய்து வருவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில்நேற்று(22.08.2026)ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"வருகின்ற (30.08.2926)ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்படவிருக்கும் சர்வதேச மகாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கிலே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எங்களின் இந்த போராட்டத்தையும் விடுதலைக்கான நோக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, இரவோடு இரவாக சில மாவட்டங்களில் OMP அலுவலகங்களைத் திறந்து அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அப்பாவி தாய்மார்களுக்கு அது தருவோம், இது தருவோம் எனக் கூறி அழைத்து மரணச் சான்றிதழ்களையும் இழப்பீடுகளையும் வழங்க முற்படுகின்றனர்.
அண்மையில் கோப்பாயில் நடந்த OMP கூட்டத்தில்கூட, 'தங்களுக்கு இழப்பீடோ மரணச் சான்றிதழோ தேவையில்லை, ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளே வேண்டும்' என தாய்மார்கள் மிகத் தெளிவாகக் கூறிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட அரசாங்கம் என்று பொய்களைக் கூறி வாக்குகளைப் பெற்ற இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நீதியைத் தராது. எமக்கான நீதி சர்வதேச நீதி மட்டுமே.
எனவே, வரும் 30-ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மகாநாட்டில் சர்வதேச மனித உரிமை உயர்ஸ்தானிகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கொடூர யுத்தத்தின் போதும் இன அழிப்பின் போதும் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சர்வதேச நீதிக்காக எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.