மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஈரோஸ் (EROS) கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் இன்று(22.08.2026)ஆம் திகதி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், 1990ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஹிஸ்புல்லா இனத்துவேஷத்தைத் தூண்டி பிளவை ஏற்படுத்தி வருவதாகவும், அவரது அராஜகச் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்...
காளி கோவில் இடிப்பு
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்து, அவ்விடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக அவரே ஒப்புக்கொண்ட விவகாரம்.
நீதவான் இடமாற்றம்
மட்டக்களப்பு நீதவானை இடமாற்றி, தனக்குச் சாதகமான நீதவானைக் கொண்டு உத்தரவுகளைப் பெற்றது.
சஹ்ரானுடன் தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது மற்றும் அவர்களது சந்திப்பு நடந்து ஒரு மாதத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்தான விசாரணை
அரசு காணி ஆக்கிரமிப்பு
அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளைச் சூறையாடியமை.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான எழுத்துப்பூர்வ ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் இறுவெட்டு (CD) வடிவிலான சான்றுகளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், "இந்த நடவடிக்கை இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல. இது ஒரு தனிநபரின் அராஜகத்திற்கு எதிரான செயல்பாடே தவிர, இஸ்லாமிய மக்கள் இதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.