மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான போரதீவுப்பற்று, திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா நேற்று (25.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் ஆரம்பமானது.
கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு மூலமூர்த்திகளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு மூர்த்திக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து வேதபாராயணம், மேள தாளங்கள் மற்றும் அடியார்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் ஆலயத்தின் கொடிமரத்தில் மகோற்சவக் கொடி ஏற்றப்பட்டது.
இன்றிலிருந்து தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழா காலத்தில், தினமும் காலை 5.00 மணிக்கு நித்திய பூஜைகளும், மாலை 5.00 மணிக்கு விசேட பூஜா விதானங்களும், தம்பஜபமும் இடம்பெறவுள்ளன.
திருவிழா நாட்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதோடு, சமயச் சொற்பொழிவுகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளும் சிறப்பாகக் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மஹோற்சவத்தின் இறுதி நிகழ்வாக, வரும் (04.09.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை விசேட பூஜைகளைத் தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 8.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு மூர்த்தி ஊர்வலமாகப் புறப்பட்டு, மட்டக்களப்பு வாவியில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் கண்டருளுவார்.
அன்று இரவு 7.00 மணிக்கு மகோற்சவக் கொடியிறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து சண்டேஸ்வரர், வைரவர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜை முறைகளுடன் 11 நாள் மஹோற்சவத் திருவிழா இனிதே நிறைவடையும்.
இவ்விழாவில் கலந்துகொண்டு எம்பெருமானின் அருள் பிரசாதங்களைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.