பேஸ்புக் குழுக்கள் ஊடாக பெண்கள், சிறுவர்களின் புகைப்படங்கள் விற்பனை- பொலிஸ் விசாரணை தீவிரம்.!

சமூக ஊடகக் குழுக்கள் (Groups) வாயிலாகச் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கொள்வனவு செய்து, பணத்திற்காக விற்பனை செய்யும் இணையவழி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

​போலியான சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி, சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்களையே இக்குழுக்களில் விற்பனை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவங்கள் முதற்கட்ட ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டுள்ளன. 

மேலும், இத்தகைய மோசடிக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்தே இயக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

​இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்கள் இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCID) மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

​வீடுகளிலிருந்தபடியே சிறுவர்களும் பெண்களும் இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் தொடர்புகொள்ளும் நண்பர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

​குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகியிருந்தாலோ அல்லது அவற்றுக்கு அடிமையாகியிருந்தாலோ, அவர்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆலோசனைகளுடன் தேவையான சட்ட உதவிகளைப் பெற 1938 (பெண்கள் உதவி மையம்) மற்றும் 1929 (சிறுவர் உதவி மையம்) ஆகிய இலவச தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​பெண்கள் மற்றும் சிறுவர்கள் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
புதியது பழையவை