மண்டூர் பாலமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அநியாயம் - நள்ளிரவில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்ற மோசடி அம்பலம்!

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் - பாலமுனை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், நேற்று(11.08.2026) நள்ளிரவில் பெற்றோலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து விற்பனை செய்து வந்த பெரும் மோசடி ஊர் மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

​நீண்டகாலமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்படும் பெற்றோலில் கலப்படம் இருப்பதாக வாகன உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் சந்தேகம் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, நள்ளிரவு வேளையில் இரகசியமாக பெற்றோல் தாங்கிகளுக்குள் மண்ணெண்ணெய் கலக்கப்படும் அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாகச் செயற்பட்டுச் சம்பவ இடத்தைச் முற்றுகையிட்டதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மக்களுடன் இணைந்து மேற்கொண்டு பரிசோதனையில், பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டு விற்பனைக்குத் தயார்படுத்தப்பட்டிருந்ததை உறுதிசெய்தனர்.

​பொதுமக்களின் பணத்தைச் சூறையாடி, வாகனங்களின் எஞ்சின்களைப் பாழாக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்த அநியாயச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​எனவே, சம்பந்தப்பட்ட எரிபொருள் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக தலையிட்டு, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை