பாராளுமன்றத்தை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சி – மட்டக்களப்பு இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடி கலந்துரையாடல்

“இளைஞர்களின் குரல் கலந்துரையாடலில் முடிவடையாமல், பாராளுமன்றத்தின் கொள்கை உருவாக்கும் செயற்பாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்” – சாணக்கியன் இராசமாணிக்கம்

மட்டக்களப்பு, 29 ஆகஸ்ட் 2026 – பாராளுமன்றத்தை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதையும், குறிப்பாக இளைஞர்களை கொள்கை உருவாக்கும் செயற்பாட்டுடன் நேரடியாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பாராளுமன்றத்தின் திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுமத்தின் (Parliamentary Caucus for Open Parliament Initiative) இணைத் தலைவராக, மற்றைய இணைத் தலைவருடனும் பாராளுமன்றக் குழுமத்துடனும் இணைந்து நான் இந்த “Voice to Policy Dialogue” தொடர் முயற்சியை முன்னெடுத்து வருகின்றேன்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல், இந்தத் தொடரின் மூன்று மாவட்ட நிகழ்வுகளில் இரண்டாவது நிகழ்வாகும். முதலாவது நிகழ்வு கம்பஹாவில் நடைபெற்றது. மூன்றாவது நிகழ்வு கண்டியில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 31 இளைஞர்களும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று, வேலைவாய்ப்பு, கல்வி, மொழித்திறன், தொழில்முனைவோர் வாய்ப்புகள், போக்குவரத்து, இளைஞர் நலன் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேரடியாக கலந்துரையாடினர்.

“225 பேரையும் நிராகரித்தோம்” என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்களுடன் மீண்டும் இணையும் பாராளுமன்றம்

அரகலய காலப்பகுதியில் “225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்” என்ற வலுவான பொதுமக்கள் கருத்து உருவானது.

அந்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவராக இருந்தேன். ஆனால், அதற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் என்னை மீண்டும் தெரிவு செய்தனர்.

மேலும், NPP வெற்றிபெறாத ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு அமைந்தது. அந்தத் தேர்தலில் எமது வெற்றிக்கு தலைமைத்துவம் வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த முக்கியமான விடயம் ஒன்றுதான் — தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திப்பதல்ல; பதவிக் காலம் முழுவதும் மக்களுடன் நெருக்கமாக இருப்பது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து அவர்களின் வாக்குகளை கேட்பவராக இருக்கக்கூடாது. மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து கேட்டு, அவற்றை புரிந்துகொண்டு, அவற்றை பாராளுமன்றத்திற்குள் கொண்டு செல்வதே ஒரு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பாகும்.

இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே “Voice to Policy Dialogue” முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இது ஆரம்பம் மட்டுமே

இந்த முயற்சியின் நோக்கம் இளைஞர்களை அழைத்து ஒரு கலந்துரையாடலை நடத்துவதுடன் முடிவடைவதல்ல.

பாராளுமன்றத்தை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதற்கான ஒரு நீண்டகால முயற்சியின் ஆரம்பமே இது.

குறிப்பாக இளைஞர்கள், தேர்தல் வரும் வரை காத்திருந்து தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருக்கக்கூடாது.

அவர்களை பாதிக்கும் கொள்கைகள் உருவாக்கப்படும் போதும், சட்டங்கள் தயாரிக்கப்படும் போதும், பாராளுமன்றத்தில் சட்டமூலங்கள் விவாதிக்கப்படும் போதும் அவர்களுடைய குரல் கேட்கப்படுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதனால், இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக, இந்த மாவட்ட கலந்துரையாடல்களில் இருந்து உருவாகும் இளைஞர் தலைவர்களை பாராளுமன்றத்தின் தொடர்புடைய குழுக்களுடன் இணைப்பதே எமது நோக்கமாகும்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, டிஜிட்டல் பொருளாதாரம் அல்லது இளைஞர்களை பாதிக்கும் வேறு எந்த கொள்கை விடயமாக இருந்தாலும், அந்தப் பிரச்சினையை உரிய பாராளுமன்றக் குழுவிடம் கொண்டு செல்வதற்கான ஒரு நேரடி பாதை இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.

அதுவே உண்மையான திறந்த பாராளுமன்றத்தின் நோக்கமாகும்.

ஆலோசனை பெறுவதிலிருந்து கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்பது வரை

மட்டக்களப்பு இளைஞர்களுடனான கலந்துரையாடலில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான புரிதல் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

கல்வியிலிருந்து வேலைவாய்ப்பிற்கு செல்வதில் உள்ள இடைவெளி, நடைமுறைத் திறன்களின் தேவை, ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழித்திறன், குறைந்த ஆரம்ப ஊதியங்கள், தொழில்முனைவோருக்கான நிதி மற்றும் வழிகாட்டல் வாய்ப்புகள், கிராமப்புற இளைஞர்களின் போக்குவரத்து சிரமங்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் மனநலம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இவை வெறுமனே கொள்கை விவாதங்களில் பேசப்படும் விடயங்கள் அல்ல. இவை இளைஞர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள்.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக எமது பொறுப்பு அவர்களுடைய கருத்துக்களை கேட்பதுடன் முடிவடையக்கூடாது. அந்தக் கருத்துக்கள் கொள்கை உருவாக்கும் செயற்பாட்டிற்குள் செல்வதற்கான நடைமுறைகளையும் நாம் உருவாக்க வேண்டும்.

“Voice to Policy Dialogue” இதற்கான ஒரு ஆரம்பமாகும்.

முதலாவது கட்டத்தில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த உரையாடல்கள் இடம்பெறுகின்றன. கம்பஹாவைத் தொடர்ந்து தற்போது மட்டக்களப்பில் இரண்டாவது உரையாடல் நடைபெற்றுள்ளது. அடுத்ததாக கண்டியில் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கும், தமது கருத்துக்களை திறந்த மனதுடன் முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள், திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுமம் மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

மக்கள் பாராளுமன்றத்தை நம்ப வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்றால், பாராளுமன்றம் மக்களிடமிருந்து தொலைவில் இருக்க முடியாது. பாராளுமன்றத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்., அவர்களின் குரலைக் கேட்க வேண்டும்.அந்தக் குரல் பாராளுமன்றத்திற்குள் எடுக்கப்படும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பாதையை உருவாக்க வேண்டும்.

இது ஆரம்பம் மட்டுமே.

சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
இணைத் தலைவர்
திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுமம்
புதியது பழையவை