தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ, சாதியவாதமோ அல்ல, அது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம்! – செ. நிலாந்தன்

தமிழ் தேசியம் என்பது சிலர் கூறுவதுபோல் பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ, சாதியவாதமோ அல்ல. அத்துடன், அது குறிப்பிட்ட சில நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சொந்தமானதும் அல்ல, அது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமே தமிழ் தேசியம் என சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மாவடிவேம்பு கிராம மக்களுக்கான காணிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தமிழ் தேசியம் என்பதை தற்போது பலர் தவறாக அடையாளப்படுத்தி வருகின்றனர். சிலர், ‘இவர்கள்தான் தமிழ் தேசியவாதிகள், இவர்களெல்லாம் தமிழ் தேசியவாதிகள் அல்ல’ என தனிநபர்களையும் குழுக்களையும் அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்கி வருகின்றனர்.

தமிழ் தேசியம் என்பது ஒரு குழுவிற்கோ அல்லது ஒரு சில நபர்களுக்கோ சொந்தமானதாக அடையாளப்படுத்தப்படுவதால், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் ஒற்றுமையும் பலமும் பலவீனப்படுத்தப்படுகிறது.

தமிழ் தேசியம் என்பது சிலர் கூறுவதுபோல் பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ அல்லது சாதியவாதமோ அல்ல. அத்துடன், அது குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சொந்தமானதும் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமாகும்.

ஒரு இனத்தின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக மொழி விளங்குகிறது. அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு உலகில் பல தேசிய இனங்கள் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு என சில தனித்துவமான அடையாளங்கள் உள்ளன.

அந்த வகையில் உலகின் தொன்மையான தேசிய இனங்களில் ஒன்றாக தமிழ் தேசிய இனம் விளங்குகிறது.

இலங்கையிலும் மொழி அடிப்படையில் சிங்கள தேசிய இனம் மற்றும் தமிழ் தேசிய இனம் என இரண்டு தேசிய இனங்கள் இருப்பதாக சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகில் தமிழராகப் பிறந்த அனைவரும் தமிழ் தேசிய இனத்தை பிரதிநிதுத்துவப் படுத்துபவர்களாகவே  இருப்பார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும், தமிழராகப் பிறந்த அனைவரும் தமிழ் தேசிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்பதே அடிப்படை அடையாளமாகும்.

ஆனால், சிலர் தமிழ் தேசியம் என்பது குறிப்பிட்ட சில நபர்களுக்கோ அல்லது சில குழுக்களுக்கோ மட்டுமே சொந்தமானது எனக் காட்டி, தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை விதைத்து, தமிழ் தேசியம் என்ற அடையாளத்தைப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.

எனவே, இனிமேல் யாரும் ‘நான் மட்டுமே தமிழ் தேசியவாதி’ எனக் கூறிக்கொண்டு வந்தால், அவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
புதியது பழையவை