கிழக்கிலங்கையின் "சின்னக்கதிர்காமம்" எனப் போற்றப்படுவதும், வரலாற்றுப் பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (08.08.2026)ஆம் திகதி சனிக்கிழமை இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழக் கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமானது.
இன்றைய தினம் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, கொடித்தம்பம் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் கொடியேற்ற நிகழ்வு முறைப்படி நடைபெற்றது.
கதிர்காம ஆலயத்தின் பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கப்புகார்கள் வாய்கட்டி வீதி உலா மற்றும் பூசைகளை நடத்தும் அதே உன்னத மரபுடன் மண்டூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவும் ஆரம்பமாகியுள்ளது.
இன்றிலிருந்து தொடர்ந்து நடைபெறும் இவ் மஹோற்சவப் பூசைகளில் போரதீவுப்பற்று மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து எம்பெருமான் வேலவனைத் தரிசித்து வருகின்றனர்.